college3

செய்திகள்&நிகழ்ச்சிகள்

Home கல்விநிறுவனங்கள் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரி

தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரி

திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீன ஆதிகுருமுதல்வர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கி.பி.17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். வீரசைவத்துறவி. இவர் கொலை மறுத்தல், வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோத உந்தியார் என்னும் நூக்களை அருளிச் செய்தவர்; பேரூரில் திருமடம் அமைத்துத் தங்கியிருந்து மக்களுக்கு நல்வழி காட்டியவர். மாசி மகம் நாளில் திருவருளில் கலந்தார். இவ்வருட்திருக்கோயில் பேரூர்ப் பட்டிப்பெருமான் திருக்கோயிலுக்குக் கிழக்கே நொய்யலாற்றங்கரையில் பேரூர் எல்லையின் தொடக்கத்திலேயே அமைந்துள்ளது. இத்திருமடம் கொங்கு நாட்டில் சமய வளர்ச்சிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் அரும்பணிகள் பல ஆற்றி வருகின்றது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் தமிழ்க்கல்லூரி அமைய எண்ணி இத்திருமடத்தில் 1950 – ல் இளையப்பட்டம் ஏற்றுக் கொண்ட தவத்திரு.இராமசாமி அடிகளார், ஆதீனக்குருமுதல்வர் தவத்திரு ஆறுமுக அடிகளார் அனுமதியுடன் தமிழ்க் கல்லூரியைத் தொடங்கும் முயற்சியை மேற்கொண்டார்கள். இம் முயற்சியின் பயனாகக் கோவைகிழார். கோ.ம.இராமச்சந்திரஞ் செட்டியார், சர். ஆர்.கே.சண்முகஞ் செட்டியார், சைவத்திரு. வெ.சி.சுப்பைய கவுண்டர் ஆதியோரின் ஒத்துழைப்புடன் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி தொடங்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் முனைவர் மு.வரதராசன் அவர்கள் தலைமையிலான ஆய்வுக்குழு வந்து பார்வையிட்டு மனநிறைவு ஒப்புதல் அளித்தது. மயிலம் 18ஆம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் குன்றக்குடி அடிகளாரால் பேரூர்த் திருக்கோயிலில் தமிழருச்சனை வழிபாட்டுடன் 4.6.1953ல் தமிழ்க்கல்லூரி தொடங்கப்பெற்றது.

இக்கழகத்திற்குத் தொடக்கத்தில் இந்தியாவின் முதல் நிதிஅமைச்சர் சர்.ஆர்.கே.சண்முகஞ் செட்டியார் தலைவராக இருந்தார். அவருக்குப்பின் சைவத்திரு. வெ.சி. சுப்பைய கவுண்டர் தலைவராக இருந்தார். இவர் கல்லூரியின் வளர்ச்சிக்காக நிலமும், பங்குகளும் கொடுத்து இத்தமிழ்க்கல்லூரியை வளர்த்தார்.

கோவைகிழார் கோ.ம. இராமச்சந்திரஞ் செட்டியார் தொடக்க காலத்தில் இக்கல்லூரிக்கழகத்தின் செயலாளராகவும் கல்லூரியின் முதல்வராகவும் தாளாளராகவும் இருந்து அரும்பணியாற்றினார்.

  திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம் சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் தொடக்க காலத்தில் இக்கல்லூரியின் துணை முதல்வராகவும், முதல்வராகவும் இருந்து பாடம் நடத்தியும், செல்வர்களிடமும் அரசிடமும் உதவிகள் பெற்றும் கல்லூரியின் பொருள் வருவாயைப் பெருக்கினார். இன்றும் கல்லூரி வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வருகிறார்கள். 1970 களில் சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவிலும் கல்விக்குழுவிழும் இடம் வகித்த அடிகளார் அவர்கள் பல்வேறு தமிழ் வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டார். புலவர் கல்லூரிகளை இளமிலக்கியவியல் (பி.லிட்) பட்டப்படிப்புக் கல்லூரிகளாக மாற்ற முயன்று வெற்றி பெற்றார். இளமிலக்கியவியல் கல்லூரிகள் செயல்படும் விதத்தை ஆராய அமைக்கப்பட்ட குழு தவத்திரு சாந்தலிங்க இராமசாமியடிகள் குழு எனப் பெயரிடப்பட்டு அக்குழு பி.லிட் கல்லூரிகளைப் பற்றி ஆராய்ந்து பல நல்ல தீர்மானங்களை நிறைவேற்றியது.

சைவத்திரு வெ.சி.சுப்பைய கவுண்டருக்குப் பின் அருட்செல்வர் டாக்டர்.நா. மகாலிங்கம் அவர்கள் தலைவராக இருந்தார். 1988ல் ஆதீனக்குருமுதல்வர் சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் தலைமைப் பொருப்பை ஏற்றார்.

மாண்புமிகு உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் இரா. செங்கோட்டுவேலன் அவர்கள் இக்கல்லூரிக் கழகத்தின் செயலாளராக இருந்துள்ளார். முன்னாள் கல்லூரிக் கல்வித்துறை இயக்குநர் முனைவர். கா.மீனாட்சிசுந்தரம் அவர்கள் இக்கல்லூரியின் மாண்புசார் செயலாளராக இருந்துள்ளார்.

சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்கள் இக்கல்லூரியின் செயலாளராக இருந்துள்ளார். தற்பொழுது திரு.பழ.தரும.ஆறுமுகம் அவர்கள் கல்லூரிச் செயலராக இருந்து வருகிறார்.

பெரியபுராண உரையாசிரியர் சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணிய முதலியார் அவர்கள், தமிழறிஞர் வரத நஞ்சையம்பிள்ளையின் சகோதர் இலக்கண நிறைகடல் புலவர் அ.கந்தசாமி பிள்ளை அவர்கள், புலவர் நடேச முதலியார் அவர்கள், கவியரசு கு.நடேச கவுண்டர் அவர்கள், குழந்தையம்மாள் ஆதியோர் இக்கல்லூரியில் சிறப்பாகப் பணியாற்றி வரலாறு படைத்துள்ளனர்.

பேரூராதீன இளையப்பட்டம் தவத்திரு (முனைவர்) மருதாசல அடிகளார் அவர்கள் தற்பொழுது முதல்வராக உள்ளார்.

1953 முதல் 1975 ஆம் ஆண்டு வரை புலவர் வகுப்பாக நடைபெற்று, 1975இல் பி.லிட்., நான்காண்டுப் பட்டப்படிப்பாகவும் மாறியது.

1981 இல் தமிழ் எம்.ஏ., வகுப்பு, 1983 இல் தமிழ் எம்.பில்., (முழுநேரம், பகுதிநேரம்), பிஎச்.டி., (முழுநேரம், பகுதி நேரம்) வகுப்புகளும் தொடங்கப்பெற்றன. 1989ல் பி.காம்., வகுப்பும் (ஆங்கில வழி), 1990 இல் (தற்செல்வப் பிரிவு) பி.காம்., (தமிழ் வழி) வகுப்பும் தொடங்கப் பெற்றது.

1993 முதல் பி.எஸ்ஸி., (கம்ப்யூட்டர் சயின்ஸ்) பட்ட வகுப்பும், பி.காம்., (கார்ப்பரேட்) பட்ட வகுப்பும் நடைபெற்று வருகின்றன. 2004 இல் எம்.காம்., வகுப்புத் தொடங்கப்பெற்றது.

வணிகவியல் பகுதிநேர எம்ஃபில், பி.எச்டி., வகுப்புகளும் நடைபெற்றுவருகின்றன.

1982 வரை சென்னைப் பல்கலைக் கழகத்தின் இணைப்புப் பெற்ற கல்லூரியாக இருந்து வந்த இக்கல்லூரி 1982 இல் பாரதியார் பல்கலைக்கழகம் தொடங்கப் பெற்றதால் அதனுடன் இணைக்கப் பெற்ற கல்லூரியாக இயங்கி வருகிறது.

பல விருதுகளையும் சிறப்புக்களையும் பெற்ற முனைவர் அ.அ.மணவாளன், இருமுறை சாகித்தய விருது பெற்ற கவிஞர் புவியரசு, மேனாள் அரசவைக் கவிஞர் புலவர் புலமைப் பித்தன் ஆதியோர் இக்கல்லூரியில் பயின்று சிறந்து விளங்குகின்றனர்.

அறுபதாண்டுகள் – மணிவிழா ஆண்டினைக் காணும் இக்கல்லூரி 5000க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்களை, சான்றோர்களை உலகம் போற்றும் வகையில் உருவாக்கியுள்ளது என்றால் மிகையாகாது

 

கல்லூரியின் கீழ் செயல்படும் அறக்கட்டளைகள்

Øகோவை கிழார் அறக்கட்டளை.

Øவெ.சி.சுப்பைய கவுண்டர் அறக்கட்டளை.

Øதவத்திரு ஆறுமுக அடிகள் அறக்கட்டளை.

Øமயிலம் 18ம் பட்டம் சிவஞான பாலய சிவாமிகள் அறக்கட்டளை.

Øமுனைவர்.கா.மீனாட்சி சுந்தரனார் அறக்கட்டளை.

Øகீரநத்தம் மருதம்மாள் தெய்வ சிகாமணிக்கவுண்டர் அறக்கட்டளை.

Øபேரூரடிகளார் அருளாட்சி வெள்ளிவிழா அறக்கட்டளை.

இந்த அறக்கட்டளைகள் வாயிலாக, கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் பயன்பெறும் வகையில் சமய, சமுதாய, இலக்கியச் சொற்பொழிவுகள் நட்த்தப்பட்டு வருகின்றன.