santhalingar2

செய்திகள்&நிகழ்ச்சிகள்

Home வரல்நெறி

வரல்நெறி

அருள்மிகு சாந்தலிங்க அடிகளார் தொண்டை நாட்டில் தோன்றி கொங்கு நாட்டில் கோவைக்கருகில் பேரூரில் ஆதினம் நிறுவியவர். இவரது காலம் 17 ஆம் நூற்றாண்டு. திருக்கயிலாயப் பரம்பரையில் சீரும், சிறப்பும் பெற்ற திருவாவடுதுறை ஆதீனநிறுவனர் அருள்மிகு நமச்சிவாய மூர்த்திகள் அவர்களின் மாணாக்கராகவும், அவ்வாதீனத்தின் இரண்டாம் பட்டமாகவும் விளங்கித் திருவண்ணாமலை ஆதீனத்தை நிறுவிய துறையூர் சிவப்பிரகாசரைக் குருவாகப் பெற்றவர்.

தமிழகத்தில் அயலவர்தாக்கம் நுழைந்து பிறசமயங்களை வளர்க்கும் அமைப்புகள் தோன்றிய காலத்தில் சைவ சித்தாந்த உண்மைகளைத் திருமுறை வழியில் விளக்குவதற்குரிய வழியினை அருளாளர்கள் மேற்கொண்டமரபே “திருக்கயிலாயமரபு” எனப் பெற்றது.

கயிலைநாதரே இம்மரபுக்கு முதல்வர் ஆவார். கயிலைநாதர் சைவசித்தாந்தச் செம்பொருளைத் தனது மாணாக்கராகிய நந்தியெம்பெருமானுக்கு அருளிச்செய்கிறார். அவ்வண்மையினை நந்தியெம்பெருமான் சனற்குமாரமுனிவர்க்கு அருளிச்செய்தார். சனற்குமாரர் சத்திய ஞானதரிசினிகளுக்கு அருளிச்செய்தார். அவர் அச்செம்பொருளின் நுட்பத்தைப் பரஞ்சோதி முனிவருக்கு அருளினார். இம்மரபு “திருக்கயிலாய அகச்சந்தான மரபு” எனப் போற்றப் பெறுகிறது.

இதனைத் தொடர்ந்து உருவாகிய புறச்சந்தான மரபில் முதலில் தோன்றியவர் மெய்கண்டார். இவர் நடுநாட்டில் உள்ள பாடல்பெற்ற தலமாகிய திருப்பெண்ணாகடம் எனும் தலத்தில் அச்சுதக்களப்பாளர் எனும் பெரியாருக்குத் தோன்றியவர். குழந்தைப்பருவத்தில் சிறுதேர்உருட்டி விளையாடிக்கொண்டிருந்த காலத்தில் வான்வழி வந்த பரஞ்சோதியார் அகத்தால் இனிதுநோக்கி உண்மைப்பொருளை நம்பிக்கு அருளினார். அன்றுமுதல் திருவெண்காட்டுநம்பி “மெய்கண்டார்” ஆனார்.

இவரது தத்துவஞானத்தையுணர்ந்த அச்சுதக்களப்பாளரின் குலகுரு சகலாகமபண்டிதர் தமக்கு மெய்பொருள் உணர்த்த வேண்டினார். மெய்கண்டாரும் அவரது விருப்பத்திற்கேற்ப மெய்ப்பொருளை உணர்த்தினார். இவரே அருணந்தி சிவாச்சாரியார். மெய்கண்டார் சிவஞானபோதம் என்ற நூலை அருளினார். அந்நூற்பொருளை விரித்து அருணந்தியார் சிவஞான சித்தியார் என்ற நூலை அருளினார். இவரின் மாணாக்கர் மறைஞான சம்பந்தர். இம்மறைஞான சம்பந்தரின் அருள்மாணாக்கர் கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார். இவர் மெய்கண்ட சாத்திரங்களுள் எட்டு நூல்களை (சித்தாந்த அட்டகம்) அருளிய பெருமைக்குரியவர்.

இவர் வழிவந்த அருள் நமச்சிவாயரின் வழி மாணாக்கரே திருவாவடுதுறை ஆதீனத்தை நிறுவிய  நமசிவாயமூர்த்திகள். இவ்வாதீனத்தின் இரண்டாம் பட்டமாக விளங்கியவர் ஆதிசிவப்பிரகாசர். இவர் தில்லையில்  முட்டுப்பட்டிருந்த வழிபாட்டைத் தொடரச் செய்தவர். அதன் நிமித்தம் இறையாணையின் வண்ணம் தமிழகத்தில் வீரசைவ ஆதீனத்தைச் சைவசித்தாந்த மரபில் தோற்றுவித்த பெருமைக்குரியவராவர். திருவண்ணாமலையிலும், துறையூரிலும் ஆதிசிவப்பிரகாசர் ஆதீனத் தலைவராகப் பொறுப்பேற்றுச் சமயப்பணியாற்றி வந்தார். அக்காலத்தில் சாந்தலிங்கர் சிவப்பிரகாசரது தவவலிமையும், அருட்பொலிவும் சீலத்தவரால் போற்றுவதைக் கேள்வியுற்றுத் திருவண்ணாமலைத் திருமடத்தை அணுகி குருநாதரை வணங்கி அவரைச் சிவமாகவே கண்டு வியந்தார். சிவப்பிரகாசர் சாந்தலிங்கரது நிலையுணர்ந்து “வீரசைவதீக்கை” அளித்து தமக்கு அணுக்கராக ஏற்றுக்கொண்டார்.

தனது குருநாதரின் அருட்கட்டளையின் வண்ணம் சாந்தலிங்கப் பெருமான் கொங்குவள நாட்டில் உள்ள பிறவாநெறித் தலமாகிய பேரூரை அடைந்து பட்டிப்பெருமான் திருவடிநிழலில் திருமடம்  அமைத்துப் பல அருட்பணிகளை ஆற்றி வந்தார். பொம்மபுரம் சிவஞான பாலய சுவாமிகளைக் கண்டு வணங்கி அருள்பெற்று மகிழ்ந்தார். கற்பனைக்களஞ்சியம் துறைமங்கலம் சிவப்பிரகாசர் நட்பு சாந்தலிங்கருக்குக் கிட்டியது. சிவஞான பாலய சுவாமிகளின் திருவருட்குறிப்பின்படி சிவப்பிரகாசசுவாமிகளின் தங்கை ஞானாம்பிகையம்மையைச் சாந்தலிங்கர் திருமணம் செய்துகொண்டார். பின்னர் சாந்தலிங்கரின் ஞானாம்பிகையாருடன் பேரூர்க்கு எழுந்தருளி திருமடத்திலிருந்து அடியவர்களுக்கு நல்வழி காட்டிவந்தார்.

சாந்தலிங்கர் மக்கள் உய்யும் பொருட்டுக் கொலைமறுத்தல், வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோத உந்தியார் என்னும் நூல்களை அருளிச்செய்தார். இவை முறையே உயிர்க்கருணையையும், பத்தியையும், வைராக்கியத்தையும், சிவஞானத்தையும் உணர்த்துவன.

மாணாக்கர் பலர் நம் குரு முதல்வர் துறவுநெறியை வற்புறுத்தும் நூல்களை அருளியும், அவற்றை நமக்குப் போதித்தும் தாம் மட்டும் இல்லறநெறியில் இருக்கின்றாரே என்று மனத்தில் எண்ணினர். அதையுணர்ந்த அடிகளார் ஒருநாள் தம் துணைவியாராகிய ஞானாம்பிகையாரை உடனிருத்துப் பாடம் சொன்னார். அப்போது சாந்தலிங்கரும் அம்மையாரும் மாணாக்கருக்கு கயிலைநாதரும், உமையம்மையுமாகக் காட்சியளித்தனர். இக்காட்சியைக் கண்ட மாணாக்கர் தாழ்ந்து பிழைபொறுக்க வேண்டினர். இந்நிகழ்வினையடுத்துச் சாந்தலிங்கர் முழுத்துறவு பூண விரும்பினார். இதற்கு இறைவனது திருவுள்ளக்குறிப்பையும் அறிய எண்ணினார். “இன்று யாம் திருவமுது ஏற்கப் புறப்படுகிறோம், முதலில் பாலன்னம் கிடைக்குமானால் முழுத்துறவு நெறியில் நிற்போம்” என்கிறார். திருவருளும் அவ்வாறே இருந்தது. அன்றுமுதல் இல்லறம் நீங்கி முழுத்துறவியாகிறார். ஞானாம்பிகையார் திருவண்ணாமலை சென்று பெரியமடத்தில் தங்கிச் சமயப்பணி ஆற்றி இறையருள் பெற்றார். அந்த இடம் ஞானாம்பிகை பீடமாக திருமடத்தின்முகப்பில் பலருக்குக் குலதெய்வமாக விளங்குகிறது.

 

குமாரதேவர் எனும் கன்னட அரசர் ஞானகுருவைத் தேடிப் பல தலங்களுக்கும் வந்தவர் திருப்பேரூரில் சாந்தலிங்கரைக் கண்டு உபதேசம் பெற விரும்பினார். அவருடைய பக்குவநிலையைச் சோதித்தறிந்து உபதேசம் அருளி தம்முடைய மாணாக்கராக்கிக் கொண்டார். பின் குமாரதேவர் குருவின் திருவுள்ளக்குறிப்பின்படி பல தலங்கட்கும் சென்றார். திருமுதுகுன்றத்தில் (விருத்தாசலத்தில்) பெரியநாயகியம்மையின் திருவருளால் மகாராசாதுறவு, சுத்தசாதகம் ஆதிய பல சாத்திரங்களையும் அருளினார். திருமுதுகுன்றத்தில் திருமடம் அமைத்துத் தங்கியிருந்த குமாரதேவரின் திருவருளுக்கு ஆளானார் சிதம்பரதேசிகர் என்பார். அவரைக் குமாரதேவர் தம் குருவாகிய சாந்தலிங்கப் பெருமானிடம் அழைத்து வந்தார். சிதம்பர அடிகளின் மதிநுட்பத்தை உணர்ந்த சாந்தலிங்கர் தாமியற்றிய நூல்களுக்கு உரைசெய்யும்படி பணித்தார். சிதம்பர அடிகளார் எழுதுய இவ்வுரை மெய்ப்பொருளை விளக்கும் வகையில் திட்பமும், நுட்பமும் செறிந்து விளங்குகிறது. இவரைக் குமாரதேவரின் சீடராக்கினார். இச்சிதம்பர அடிகளார் சென்னைக்கரிகிலுள்ள திருப்போரூர் என்னும் தலத்தினையடைந்து அங்கு மறைந்துகிடந்த முருகப்பெருமான் கோவிலைப் புதுப்பித்து வழிபாடு செய்து ஆதீனம் ஏற்படுத்தி அங்கேயே தங்கியிருந்தனர். அவர் அருளிய பாடல்கள் “திருப்போரூர் சந்நிதிமிறை” என்று வழங்கப்படுகின்றன.

இறையருளோடு குருவருளும் பெற்றுப் பல அடியார்களை உருவாக்கி வீரசைவ மரபைப் போற்றிவளர்ந்த சாந்தலிங்கப் பெருமான் மாசித்திங்கள் மகம் விண்மீன் கூடிய நிறைமதி நாளில் ஞானநிலை அடைந்து தாம் வழிபடும் கூத்தப்பெருமான் திருவடியில் கலந்தார். சாந்தலிங்கருடைய சமாதித் திருக்கோயிலும், திருமடமும் அணி காஞ்சிவாய்ப் பேரூரில் பட்டிப்பெருமான் திருக்கோயிலுக்குக் கிழக்கே நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளன.

தற்போது குருமகா சந்நிதானமாகக் கயிலைக்குருமணி சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் தமிழகம் மட்டுமின்றி அனைத்துக் கண்டங்களுக்கும் சென்று சமயப்பணியும், தமிழ்ப்பணியும் ஆற்றிவருகிறார். முதன்முதலாக திருநெறிய தமிழ்முறைப்படி கோயில் குடமுழுக்கு, வேள்விகள், திருமணம், புதுமனை புகுவிழா என அருளியல் மற்றும் வாழ்வியல் சடங்குகளையும் நடத்திய பெருமை இவரையே சாரும். திருமடத்தின் இளைய பட்டமாகவும் உதகை (நீலகிரி) காந்தள் ஆலமர்செல்வர் திருமடத்தின் ஆறாவது குருமகா சந்நிதானமாகவும் தவத்திரு. மருதாசல அடிகள் அருளாட்சி புரிந்துவருகிறார்.