img15

செய்திகள்&நிகழ்ச்சிகள்

Home திருமடம்

திருமடம்

திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி

பேரூராதீனம்

 

அருள்மிகு சாந்தலிங்க அடிகளார் திருமடம்

பேரூர், கோவை 641 010

திருமடத்தின் சமய, சமுதாய, இலக்கிய, கல்வி, மருத்துவப் பணிகள்

   அருள்மிகு சாந்தலிங்க அடிகளார் தொண்டை நாட்டில் தோன்றி கொங்கு நாட்டில் கோவைக்கருகில் பேரூரில் ஆதினம் நிறுவியவர். இவரது காலம் 17 ஆம் நூற்றாண்டு. திருக்கயிலாயப் பரம்பரையில் சீரும், சிறப்பும் பெற்ற திருவாவடுதுறை ஆதீனநிறுவனர் அருள்மிகு நமச்சிவாய மூர்த்திகள் அவர்களின் மாணாக்கராகவும், அவ்வாதீனத்தின் இரண்டாம் பட்டமாகவும் விளங்கித் திருவண்ணாமலை ஆதீனத்தை நிறுவிய துறையூர் சிவப்பிரகாசரைக் குருவாகப் பெற்றவர்.

தமிழகத்தில் அயலவர்தாக்கம் நுழைந்து பிறசமயங்களை வளர்க்கும் அமைப்புகள் தோன்றிய காலத்தில் சைவ சித்தாந்த உண்மைகளைத் திருமுறை வழியில் விளக்குவதற்குரிய வழியினை அருளாளர்கள் மேற்கொண்டமரபே “திருக்கயிலாயமரபு” எனப் பெற்றது.

கயிலைநாதரே இம்மரபுக்கு முதல்வர் ஆவார். கயிலைநாதர் சைவசித்தாந்தச் செம்பொருளைத் தனது மாணாக்கராகிய நந்தியெம்பெருமானுக்கு அருளிச்செய்கிறார். அவ்வண்மையினை நந்தியெம்பெருமான் சனற்குமாரமுனிவர்க்கு அருளிச்செய்தார். சனற்குமாரர் சத்திய ஞானதரிசினிகளுக்கு அருளிச்செய்தார். அவர் அச்செம்பொருளின் நுட்பத்தைப் பரஞ்சோதி முனிவருக்கு அருளினார். இம்மரபு “திருக்கயிலாய அகச்சந்தான மரபு” எனப் போற்றப் பெறுகிறது.

இதனைத் தொடர்ந்து உருவாகிய புறச்சந்தான மரபில் முதலில் தோன்றியவர் மெய்கண்டார். இவர் நடுநாட்டில் உள்ள பாடல்பெற்ற தலமாகிய திருப்பெண்ணாகடம் எனும் தலத்தில் அச்சுதக்களப்பாளர் எனும் பெரியாருக்குத் தோன்றியவர். குழந்தைப்பருவத்தில் சிறுதேர்உருட்டி விளையாடிக்கொண்டிருந்த காலத்தில் வான்வழி வந்த பரஞ்சோதியார் அகத்தால் இனிதுநோக்கி உண்மைப்பொருளை நம்பிக்கு அருளினார். அன்றுமுதல் திருவெண்காட்டுநம்பி “மெய்கண்டார்” ஆனார்.

இவரது தத்துவஞானத்தையுணர்ந்த அச்சுதக்களப்பாளரின் குலகுரு சகலாகமபண்டிதர் தமக்கு மெய்பொருள் உணர்த்த வேண்டினார். மெய்கண்டாரும் அவரது விருப்பத்திற்கேற்ப மெய்ப்பொருளை உணர்த்தினார். இவரே அருணந்தி சிவாச்சாரியார். மெய்கண்டார் சிவஞானபோதம் என்ற நூலை அருளினார். அந்நூற்பொருளை விரித்து அருணந்தியார் சிவஞான சித்தியார் என்ற நூலை அருளினார். இவரின் மாணாக்கர் மறைஞான சம்பந்தர். இம்மறைஞான சம்பந்தரின் அருள்மாணாக்கர் கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார். இவர் மெய்கண்ட சாத்திரங்களுள் எட்டு நூல்களை (சித்தாந்த அட்டகம்) அருளிய பெருமைக்குரியவர்.

இவர் வழிவந்த அருள் நமச்சிவாயரின் வழி மாணாக்கரே திருவாவடுதுறை ஆதீனத்தை நிறுவிய நமசிவாயமூர்த்திகள். இவ்வாதீனத்தின் இரண்டாம் பட்டமாக விளங்கியவர் ஆதிசிவப்பிரகாசர். இவர் தில்லையில் முட்டுப்பட்டிருந்த வழிபாட்டைத் தொடரச் செய்தவர். அதன் நிமித்தம் இறையாணையின் வண்ணம் தமிழகத்தில் வீரசைவ ஆதீனத்தைச் சைவசித்தாந்த மரபில் தோற்றுவித்த பெருமைக்குரியவராவர். திருவண்ணாமலையிலும், துறையூரிலும் ஆதிசிவப்பிரகாசர் ஆதீனத் தலைவராகப் பொறுப்பேற்றுச் சமயப்பணியாற்றி வந்தார். அக்காலத்தில் சாந்தலிங்கர் சிவப்பிரகாசரது தவவலிமையும், அருட்பொலிவும் சீலத்தவரால் போற்றுவதைக் கேள்வியுற்றுத் திருவண்ணாமலைத் திருமடத்தை அணுகி குருநாதரை வணங்கி அவரைச் சிவமாகவே கண்டு வியந்தார். சிவப்பிரகாசர் சாந்தலிங்கரது நிலையுணர்ந்து “வீரசைவதீக்கை” அளித்து தமக்கு அணுக்கராக ஏற்றுக்கொண்டார்.

தனது குருநாதரின் அருட்கட்டளையின் வண்ணம் சாந்தலிங்கப் பெருமான் கொங்குவள நாட்டில் உள்ள பிறவாநெறித் தலமாகிய பேரூரை அடைந்து பட்டிப்பெருமான் திருவடிநிழலில் திருமடம் அமைத்துப் பல அருட்பணிகளை ஆற்றி வந்தார். பொம்மபுரம் சிவஞான பாலய சுவாமிகளைக் கண்டு வணங்கி அருள்பெற்று மகிழ்ந்தார். கற்பனைக்களஞ்சியம் துறைமங்கலம் சிவப்பிரகாசர் நட்பு சாந்தலிங்கருக்குக் கிட்டியது. சிவஞான பாலய சுவாமிகளின் திருவருட்குறிப்பின்படி சிவப்பிரகாசசுவாமிகளின் தங்கை ஞானாம்பிகையம்மையைச் சாந்தலிங்கர் திருமணம் செய்துகொண்டார். பின்னர் சாந்தலிங்கரின் ஞானாம்பிகையாருடன் பேரூர்க்கு எழுந்தருளி திருமடத்திலிருந்து அடியவர்களுக்கு நல்வழி காட்டிவந்தார்.

சாந்தலிங்கர் மக்கள் உய்யும் பொருட்டுக் கொலைமறுத்தல், வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோத உந்தியார் என்னும் நூல்களை அருளிச்செய்தார். இவை முறையே உயிர்க்கருணையையும், பத்தியையும், வைராக்கியத்தையும், சிவஞானத்தையும் உணர்த்துவன.

மாணாக்கர் பலர் நம் குரு முதல்வர் துறவுநெறியை வற்புறுத்தும் நூல்களை அருளியும், அவற்றை நமக்குப் போதித்தும் தாம் மட்டும் இல்லறநெறியில் இருக்கின்றாரே என்று மனத்தில் எண்ணினர். அதையுணர்ந்த அடிகளார் ஒருநாள் தம் துணைவியாராகிய ஞானாம்பிகையாரை உடனிருத்துப் பாடம் சொன்னார். அப்போது சாந்தலிங்கரும் அம்மையாரும் மாணாக்கருக்கு கயிலைநாதரும், உமையம்மையுமாகக் காட்சியளித்தனர். இக்காட்சியைக் கண்ட மாணாக்கர் தாழ்ந்து பிழைபொறுக்க வேண்டினர். இந்நிகழ்வினையடுத்துச் சாந்தலிங்கர் முழுத்துறவு பூண விரும்பினார். இதற்கு இறைவனது திருவுள்ளக்குறிப்பையும் அறிய எண்ணினார். “இன்று யாம் திருவமுது ஏற்கப் புறப்படுகிறோம், முதலில் பாலன்னம் கிடைக்குமானால் முழுத்துறவு நெறியில் நிற்போம்” என்கிறார். திருவருளும் அவ்வாறே இருந்தது. அன்றுமுதல் இல்லறம் நீங்கி முழுத்துறவியாகிறார். ஞானாம்பிகையார் திருவண்ணாமலை சென்று பெரியமடத்தில் தங்கிச் சமயப்பணி ஆற்றி இறையருள் பெற்றார். அந்த இடம் ஞானாம்பிகை பீடமாக திருமடத்தின்முகப்பில் பலருக்குக் குலதெய்வமாக விளங்குகிறது.

குமாரதேவர் எனும் கன்னட அரசர் ஞானகுருவைத் தேடிப் பல தலங்களுக்கும் வந்தவர் திருப்பேரூரில் சாந்தலிங்கரைக் கண்டு உபதேசம் பெற விரும்பினார். அவருடைய பக்குவநிலையைச் சோதித்தறிந்து உபதேசம் அருளி தம்முடைய மாணாக்கராக்கிக் கொண்டார். பின் குமாரதேவர் குருவின் திருவுள்ளக்குறிப்பின்படி பல தலங்கட்கும் சென்றார். திருமுதுகுன்றத்தில் (விருத்தாசலத்தில்) பெரியநாயகியம்மையின் திருவருளால் மகாராசாதுறவு, சுத்தசாதகம் ஆதிய பல சாத்திரங்களையும் அருளினார். திருமுதுகுன்றத்தில் திருமடம் அமைத்துத் தங்கியிருந்த குமாரதேவரின் திருவருளுக்கு ஆளானார் சிதம்பரதேசிகர் என்பார். அவரைக் குமாரதேவர் தம் குருவாகிய சாந்தலிங்கப் பெருமானிடம் அழைத்து வந்தார். சிதம்பர அடிகளின் மதிநுட்பத்தை உணர்ந்த சாந்தலிங்கர் தாமியற்றிய நூல்களுக்கு உரைசெய்யும்படி பணித்தார். சிதம்பர அடிகளார் எழுதுய இவ்வுரை மெய்ப்பொருளை விளக்கும் வகையில் திட்பமும், நுட்பமும் செறிந்து விளங்குகிறது. இவரைக் குமாரதேவரின் சீடராக்கினார். இச்சிதம்பர அடிகளார் சென்னைக்கரிகிலுள்ள திருப்போரூர் என்னும் தலத்தினையடைந்து அங்கு மறைந்துகிடந்த முருகப்பெருமான் கோவிலைப் புதுப்பித்து வழிபாடு செய்து ஆதீனம் ஏற்படுத்தி அங்கேயே தங்கியிருந்தனர். அவர் அருளிய பாடல்கள் “திருப்போரூர் சந்நிதிமிறை” என்று வழங்கப்படுகின்றன.

இறையருளோடு குருவருளும் பெற்றுப் பல அடியார்களை உருவாக்கி வீரசைவ மரபைப் போற்றிவளர்ந்த சாந்தலிங்கப் பெருமான் மாசித்திங்கள் மகம் விண்மீன் கூடிய நிறைமதி நாளில் ஞானநிலை அடைந்து தாம் வழிபடும் கூத்தப்பெருமான் திருவடியில் கலந்தார். சாந்தலிங்கருடைய சமாதித் திருக்கோயிலும், திருமடமும் அணி காஞ்சிவாய்ப் பேரூரில் பட்டிப்பெருமான் திருக்கோயிலுக்குக் கிழக்கே நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளன.

தற்போது குருமகா சந்நிதானமாகக் கயிலைக்குருமணி சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் தமிழகம் மட்டுமின்றி அனைத்துக் கண்டங்களுக்கும் சென்று சமயப்பணியும், தமிழ்ப்பணியும் ஆற்றிவருகிறார். முதன்முதலாக திருநெறிய தமிழ்முறைப்படி கோயில் குடமுழுக்கு, வேள்விகள், திருமணம், புதுமனை புகுவிழா என அருளியல் மற்றும் வாழ்வியல் சடங்குகளையும் நடத்திய பெருமை இவரையே சாரும். திருமடத்தின் இளைய பட்டமாகவும் உதகை (நீலகிரி) காந்தள் ஆலமர்செல்வர் திருமடத்தின் ஆறாவது குருமகா சந்நிதானமாகவும் தவத்திரு. மருதாசல அடிகள் அருளாட்சி புரிந்துவருகிறார்.

ஆதீனத்தின் சமயப்பணிகள்

1954 ஆம் ஆண்டு முதல் பொதுமக்களுக்குச் சாதி, பால், வயது வேறுபாடின்றி வாழ்வியல் அருளியல் சடங்குகள், வழிபாடுகள் நடத்துவதற்கு உரிய பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இதுவரை 150 மகளிர் உட்பட 900 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்கள் தமிழிலேயே பிள்ளையார் வேள்வி, கோவில் திருக்குட நன்னீராட்டு ஆதிய அருளியல் நிகழ்வுகள், புதுமனைப் புகுவிழா, திருமணம், மணிவிழா ஆதிய வாழ்வியல் நிகழ்வுகளையும் நட்த்துகின்றனர். இவர்களது செம்மையான மற்றும் உள்ளார்ந்த பணியின் காரணமாக இதுவரை ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் தமிழ் முறை வழிபாட்டுன் மூலம் திருக்குட நன்னீராட்டுப் பெற்றுள்ளன.

இயற்கைச் சீற்றம் மற்றும் பராமரிப்பின்மை காரணமாகச் சேதமடைந்த 10க்கும் மேற்பட்ட கோயில்கள் திருமடத்தால் புதுப்பிக்கப் பட்டுள்ளன. இவற்றில் 6 கோயில்கள் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை ஆகும். பலநூறு சிறுகோயில் திருப்பணிகளுக்கும் ஆதீனம் துணை நின்று வருகிறது.

உலக இந்துப் பேரவை (வி.எச்.பி), தமிழகத் துறவியர் பேரவை, இந்தியத் துறவியர் பேரவை, ஆச்சாரியர் சபை ஆதிய சமய அமைப்புகளில் பங்கேற்றுச் சமய வளர்ச்சிப் பணிகளில் துணை நின்று வருகிறது.

அருளாளர்களின் அருட்பாடல்கள் அனைவரும் படித்துப் போற்றும் வகையில் சிறுவெளியீடுகளாகவும், கையேடுகளாகவும் அச்சிடப்பெற்று சிறப்பு நாட்களில் அன்பர்களுக்கு வழங்கப்படுகின்றன. 50 வகையான தலைப்புகளில் 3 இலட்சம் படிகள் பலன்தரும் அருட்பாடல்களாக வழங்கப்பட்டுள்ளன.

15 ஆண்டுகளாகத் தொடர்ந்து 45க்கும் மேற்பட்ட ஒருநாள், மற்றும் மூன்று நாள் சமயப்பயிற்சி முகாம்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடந்து வருகிறது. இம்முகாம்களில் இதுவரை 3000 நபர்கள் பங்கேற்று பயன்பெற்று உள்ளனர்.

திருமடத்தின் முயற்சியால் கடந்த 50 ஆண்டுகளாக இதுவரை 12000 பேர் புறச் சமயங்களில் இருந்து தாய்ச்சமயம் திரும்பி உள்ளனர். சிறைச்சாலைக் கைதிகளுக்குத் திங்கள் தோறும் சிறப்பு வகுப்புகள், வழிபாடு நடத்துதல் ஆகிய பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

மலைவாழ் மக்கள், சேரிமக்கள், பொதுமக்களுக்கு ஞானாம்பிகை வழிபாட்டுக்குழுவினரால் 500க்கும் மேல் திருவிளக்கு வழிபாடுகள் நடத்திக் கொடுக்கப்பட்டு உள்ளன.

பேரூர், மருதமலை, முத்தூர், ஈச்சனாரி, கோயில்பாளையம் கோயில்களில் சிறப்புக்கட்டளைகள் மூலமாக வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. தென்கயிலாய தவநெறிச்சாலை மூலம் இளைஞர்களுக்கும், வயதில் மூத்தோருக்கம் மந்திர தீட்சை, துறவுப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் மலேசியா, மொரீசியசு, இங்கிலாந்து, அமெரிக்க, தென்ஆப்பிரிக்க அன்பர்கள் சமயதீட்சை, சிவபூசைதீட்சை, ஆசாரிய தீட்சை, வீரசைவ தீட்சைபெற்று மேன்மைகொள் சைவ நீதியைப் பின்பற்றி வருகின்றனர்.

தமிழ்நாடு தெய்வீகப் பேரவை, அருள்நெறித் திருக்கூட்டம், சாந்தலிங்கர் அருள்நெறி மன்றங்கள் வழி கூட்டு வழிபாடுகள், உழவாரப்பணி, நூல் வெளியீடு ஆதியன நடைபெறுகின்றன.

அவ்வப்போது, அடியார்களைப் பாடல் பெற்ற தலங்களுக்கும், கயிலை, அமர்நாத், ஆதிய புனிதத்தலங்களுக்கும், அயல் நாடுகளுக்கும் சாந்தலிங்கர் திருத்தலப் பயணக்குழு மூலமாக அழைத்துச் சென்று வழிபடச் செய்துள்ளது. சுமார் 20,000 பேர் பயன் பெற்றுள்ளனர்.

அம்பலவாணர் வழிபாட்டுக் குழு மூலம் கட்டளைகள் வழி வழிபாடு, அன்னம்பாலிப்பு நடைபெற்று வருகின்றன.

சிறுவாணி அடிவாரம் சாடிவயல் திருநெல்லிக்காவில் தென்கயிலை தவநெறிச் சாலை அமைக்கப்பெற்றுள்ளது. இதன் வழி துறவியர் பயிற்சி மையம், முதியோர் சமயப் பயிற்சி மையம் நடத்தப்பெற உள்ளது.

சமுதாயப்பணிகள்

ஆண்டுதோறும் அடிகள் பெருந்தகை அவர்களின் நாண்மங்கல விழாவன்று 1000 பள்ளிக்குழந்தைகளுக்குச் சீருடைகளும், சுமார் 300 பேர்க்கு ஆடைகளும் கொடையாக வழங்கப்படுகின்றன. மலைவாழ் மக்களுக்குக் கடந்த 18 ஆண்டுகளாக ஆடைக்கொடை, அன்னம்பாலிப்பும் தைத்திங்கள் திருநாளில் பொங்கல் வைப்பதற்கு உரிய பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

சாந்தலிங்கர் கோசாலை அறக்கட்டளை தொடங்கப்பட்டு 40 மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன். மத்திய அரசின் பிராணிகள் நலவாரியம் கோசாலையை அங்கீகரித்துள்ளது. மேலும் விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் உழவர்களுடன் சேர்ந்து மழைவேண்டிப் பூண்டியிலும், வெள்ளியங்கிரி மலை உச்சியிலும் வேள்விகள் நடத்தப்பட்டு வருகின்றன.

1950 ஆம் ஆண்டிலிருந்து அன்புஇல்லம் மூலம் ஆதரவற்ற குழ்ந்தைகள் 30 பேருக்கு கல்வி, உணவு, உடை, இருப்பிடம், நன்னெறி வழிகாட்டுதல் போன்றவை அளிக்கப்படுகின்றன.

மகளிருக்கு கைவினைப்பொருட்கள் தயாரிப்பு, தையல் பயிற்சி, ஆண்களுக்கு மின்சாதனப்பொருட்கள் பழுதுபார்த்தல் போன்ற சுயசார்பு பயிற்சிகள் 6 மாதகாலத்திற்கு வழங்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன். மலைவாழ்மக்களும் பயன்பெறுகின்றனர்.

ஆண்டுதோறும் பொங்கல் திருநாளையொட்டி வேளாண்மைத்தொழிலில் சிறந்து விளங்கும் உழவர்களுக்குச் சிறப்புவிருதுகள் (இதுவரை 55 பேர்) வழங்கிச் சிறப்பிக்கப்படுகிறது.

தமிழ், இலக்கியப் பணிகள்

1914 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சத்வித்ய சன்மார்க்க சங்கத்தின் மூலம் ஞானியார் அடிகள் மறைமலை அடிகள், திரு.வி.க, சுத்தாநந்த பாரதியார் போன்ற சிறந்த அறிஞர்களைக்கொண்டு இலக்கியதொடர் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சாந்தலிங்கப்பெருமானின் நூல்கள் மற்றும் பிறநூல்கள் குமாரதேவர் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்படுகின்றன. சித்தர் இலக்கியம், பெருங்கதை, சிவப்பிரகாசர் நூல்கள், தொல்காப்பியம் ஆகியவற்றில் தேசியக்கருத்தரங்கம் நடத்தப்பெற்று ஆய்வுமாலைகள் வெளியிடப்பட்டுள்ளன. 15 ஆண்டுகளாக திங்கள்தோறும் சிவசாந்தலிங்கர் என்னும் திங்களிதழ் 3000 ஆம் படிகள் வெளியிடப்படுகிறது.

மருத்துவப்பணிகள்

பேரூராதீனத்தில் கடந்த 1998 ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு புதன்கிழமையன்று 50 முதல் 100 நபர்களுக்கு மருத்துவ ஆலோசனை, மருந்துகள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன. உதகை திருமடத்தில் 1938 முதல் இலவசசித்த மருத்துவமனை நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை தோறும் அலோபதி மருத்துவசாலை நடத்தப்படுகிறது. 100 முதல் 150 பேர்வரை பயன்பெறுகின்றனர்.

சித்தமருத்துவ மூலிகைக்கண்காட்சி நடத்தப்பட்ட்து. சாடிவயல் (சிறுவாணி) மையத்தில் மூலிகைப்பண்ணை காட்சியகம் உள்ளது. அங்கு ஆண்டுக்கு மூன்றுமுறை மலைவாழ்மக்களுக்காக சிறப்பு மருத்துவமுகாம் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

அவ்வப்போது கண், பல், பொதுநலச்சிறப்பு மருத்துவமுகாம்கள் நடத்தப்படுகிறது. முகாம்கள் மூலம் சுமார் 5000 பேர் பயனடைந்துள்ளனர். திருமடத்தோடு தொடர்புடைய அன்பர்களைக்கொண்டு 15 நபர்களுக்கு இதய அறுவைச்சிகிச்சை, பிற அறுவைச்சிகிச்சைகளுக்கும் உதவப்பட்டுள்ளது. திருமடத்தோடு தொடர்புடைய மருத்துவர்கள் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் தேவையான மருத்துவ உதவி செய்யப்படுகிறது.

அவ்வப்போது சாந்தலிங்கர் குருதிக்கொடைக்குழு மூலம் சுமார் 500 குருதிக் கொடைகள் வழங்கப்பட்டுள்ளது.

கல்விப்பணி

1953ல் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது முதல் இதுவரை 3000த்திற்கும் மேற்பட்ட புலவர்களை தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு தந்துள்ளது. கலை, அறிவியல், வணிகவியல் பட்டப்படிப்புகள் மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள், எம்.பில், பி.எச்டி வகுப்புகளும் நடைபெறுகின்றன.

சுமார் 400 ஓலைச்சுவடிகள், பழமையான 15,000க்கும் மேற்பட்ட நூல்கள் கல்லுரி நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மிகப்பழமையான தொல்பொருள்கள், நாணயங்கள், செப்பேடுகள் கொண்ட தொல்பொருள் கூடம் உள்ளது. 60க்கும் மேற்பட்ட கணிப்பொறிகள் மற்றும் அனைத்தும் வசதிகளும் கொண்ட கணிணி ஆய்வக மையம் உள்ளது.

தமிழ்க்கல்லூரியில் 1970ஆம் ஆண்டு முதல் 40 க்கும் மேற்ப்பட்ட நாட்டுநலப்பணி திட்ட களப்பணிகள் நடைபெற்றுள்ளன. ஆண்டுதோறும் கோவை மாவட்ட அளவில் கல்லூரிகளுக்கான திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட்டு சுழல்கோப்பை, பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. அறக்கட்டளைகள் மூலம் பல்வகை சொற்பொழிவுகள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன. பல்கலைக்கழக அளவில் நடத்தப்படும் தேர்வுகளில் மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்று வருகின்றனர். மாணவர்களுக்கு ஓலைச்சுவடி, தொல்பொருள் பேணல், ஆவணப்பாதுகாப்பு, சுவடி பதிப்பித்தல் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

1952 ஆண்டு தொடங்கப்பட்ட தவத்திரு சாந்தலிங்க அடிகளார் மேல்நிலைப்பள்ளி 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழி மூலம் நடைபெறுகிறது. பள்ளியில் திங்கள் தோறும் மரபுசார்ந்த விழாக்கள் ஆகிய நூறாயிரம் பரவுதல் (இலட்சார்ச்சனை) கலைமகள் விழா, பாவை விழா, பொங்கள் விழா ஆகியவற்றை மாணவர்களே முன்னின்று நடத்துகிறார்கள்.

1974 ஆம் ஆண்டு தொடங்கப்பெற்ற ஞானாம்பிகை நுழைவுரிமைப் பள்ளி ஆங்கிலவழிக் கல்வியுடன் மரபுசார்ந்த பழக்க வழக்கங்களையும் ஆன்மீகத்தையும் போதித்து வருகிறது.

தவத்திரு ஆறுமுக அடிகளார் தாய்தமிழ்பள்ளி 2000 மாவது ஆண்டு தொடங்கப்பட்டு சிறப்பான முறையில் 1 முதல் 5 ஆம் வகுப்புவரை தமிழ் வழிக்கல்வி நல்கப்படுகிறது.

உதகமண்டலத்தில் ஓம் பிரகாச அடிகளார் தொடக்கப்பள்ளி 1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கல்வி, சீருடை, புத்தகங்கள், ஏடுகள் என அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. மேல்வகுப்புகள் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ்நிலையில் உள்ளவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ஆண்டிற்கு சுமார் ரூ 3,00,000 வரை வழங்கப்படுகிறது. ஆய்வு செய்யும் மாணவர்கள் (எம்.ஃபில், பி.எச்டி) ஊக்கத்தொகை வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு இலக்கியப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஆண்டுதோறும் சுமார் ஆயிரம் முதல் 2000 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

கல்விசேவை மட்டுமல்லாமல் தமிழ்ப்பண்ணிசை, பரதம், வயலின், மிருதங்கம், ஆர்மோனியம், வாய்ப்பாட்டு நுண்கலைகளும், யோகா, தியானம் போன்ற பயிற்சிகளும், தன்னம்பிக்கை வளர்க்கும் பயிற்சிகளும் ஆளுமைத்திறன் வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.