img5

செய்திகள்&நிகழ்ச்சிகள்

Home வழிபாட்டுப் பாடல்கள்

வழிபாட்டுப் பாடல்கள்


திருச்சிற்றம்பலம்

விநாயகர் துதி

இன்பம் ஆயது அறாதுஇடை ஓங்கவும்
துன்பம் ஆயது தூரத்துள் நீங்கவும்
முன்ப ராபரன் மொய்குழ லோ(டு) அணைந்(து)
அன்பின் ஈன்றஓர் ஆனையைப் போற்றுவாம்

     மனம் விரும்பியபடி நன்மைகள் மேலும் மேலும் உண்டாகவும், தன்னாலும் பிற உயிர்களாலும் தெய்வத்தாலும் வரும் மூன்று வகையான துன்பங்களும் அணுகாமலும், தூரத்தில் நீங்குமாறு ஆதியில் பரமசிவன் பராசக்தியோடு கூடி அன்புடன் பெற்று அருளிய ஒப்பில்லாத விநாயகப் பெருமானை வணங்குவோம்.

   ‘துன்பம் தூரத்துள் நீங்க’ என்றது, தம்முடைய மனம் மொழி மெய்களுக்கு எட்டாது அப்பால் நீங்க என்று கூறினார்.

   இன்பமாயது ஓங்கவும் துன்பமாயது நீங்கவும் என்றது,பேரின்பப் பேறும் அறியாமை இழப்பும் என்றது.
——————————————————————————————————————

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு.
——————————————————————————————————————-

ஐந்து கரத்தனை ஆனை முகத்தினை
இந்தின் இளம்பிளை போலும் எயிற்றனை
நந்திமகன் தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்று கின்றேன்.
——————————————————————————————————————-

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே.
——————————————————————————————————————-

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கைதணி விப்பான் – விநாயகனே
விண்ணிற்க்கும் மண்ணிற்க்கும் நாதனுமாந் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கலந்து.
——————————————————————————————————————-

 

குருவருள் பெற

எல்லாம் உடையான் குருவாகி ஈங்கெமது
அல்லால் அறுத்தான் என்றுந்தீபற
அவன் தாள் தொழுவாம் என்றுந்தீபற.

-சாந்தலிங்கப்பெருமான்

——————————————————————————————————————-

தேவாரம்

நோய் தீர்த்தருள

பேரா யிரம்பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே.

-திருநாவுக்கரசர் தேவாரம்

——————————————————————————————————————-

திருஞானசம்பந்தர் தேவாரம்

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்திர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் லுள்ளது நீறு
செந்துவர் வாயுமைபங்கன் திரு ஆலவாயன் திருநீறே.
——————————————————————————————————————-

திருப்புகழ்

அபகார நிந்தைபட் டுழலாதே
அறியாத வஞ்சரைக் குறியாதே
உபதேச மந்திரப் பொருளாலே
உனைநானி னைந்தருட் பெறுவேனோ
இபமாமு கன்தனக் கிளையோனே
இமவான்ம டந்தையுத் தமிபாலா
ஜெபமாலை தந்தசற் குருநாதா
திருவாவி னன்குடிப் பெருமாளே.

——————————————————————————————————————-

ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்கும்முக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசலம்அ மர்ந்தபெரு மாளே.
——————————————————————————————————————-

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை கடிதேகும்
மத்தமும் மதியமும் வத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடி செய்த அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே.

- அருணகிரிநாதர்

——————————————————————————————————————-

அம்மைப் பதிகம்

ஆத்தாளை எங்கள் அபிராம
வல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை மாதுளம்பூ நிறத்
தாளைப் புவியடங்கக்
காத்தாளை அங்கையிற் பாசாங்
குசமும் கரும்பு வில்லும்
சேர்த்தாளை முக்கண்ணி யைத் தொழு
வார்க்கொரு தீங்கில்லையே.
——————————————————————————————————————-

வாழ்வில் பெறவேண்டிய பதினாறு பேறுகள்

கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி அலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும்
ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப்
பெரியதொண்டரோடு கூட்டுகண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது
தங்கையே! ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே
——————————————————————————————————————-

திருப்பாவை

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாள்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கு இன்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.
——————————————————————————————————————-

வாழ்த்து

வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலக மெல்லாம்.
—————————————————————————————————————–

சைவ முழக்கங்கள்

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி.

சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி

ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெணுரு ஆனாய் போற்றி

தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி

குவளைக் கண்ணி கூறன் காண்க
அவளுந் தானும் உடனே காண்க

காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
——————————————————————————————————————-